• Ph: 044-24460101, 9444297058, 9176055660 | mailmindzone@gmail.com

Subscribe to Mind Zone Newsletter to get the latest news/updates from Mind Zone, including the latest developments in the field of Psychiatry and Psychology. Just enter your Email address below and click "Signup".

Mind: an illusory mirror - part 5

Mind: An Illusory Mirror | Special Feature – Part 5

400 557 Mind Zone

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயகண்ணாடி 5

விஜய். பார்க்க மிக அழகான இளைஞராக இருக்கும் அவருக்கு மனநோய் பாதிப்பு இருக்குமென நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. ஆனால், அவர் மிகத் தீவிரமான மனநோயின் தாக்கத்தில் இருப்பது மனநல மருத்துவர் சொல்லியே எனக்கு தெரிந்தது. அவன் சதா தன் அப்பா முன் வைத்த சவால் விசித்திரமானது. ஒரு கத்தியை அவர் முன்னால் போட்டு ஒன்று நீ என்னைக் கொல்லு அல்லது நான் உன்னைக் கொல்கிறேன் என்பதே அது. கேட்டதும் எனக்கு ஒரு முறை தூக்கி வாரிப் போட்டது.

விஜய் மிக நன்றாக படிக்கக் கூடிய மாணவனாகத் தான் இருந்திருக்கிறான். நன்றாக என்றால் ரொம்பவே நன்றாகவே. அழகான குடும்பம். ஒரே ஒரு தங்கை. வேலை பார்க்கும் பெற்றோர். நம்மை மீறி செயல்படும் சக்தியின் பெயர் கடவுளா விதியா என்று மனித சமுதாயம் ஒருமித்த ஒரு பதில் தெரியாத வரைக்கும் அவன் வாழ்வின் சிக்கல்களுக்கான தத்துவார்த்த பதில் கிடைக்கப் போவதில்லை. பள்ளியில் எந்த பரீட்சையோ, போட்டியோ அவனுக்கே முதல் இடம் கிடைக்கும்.

வீட்டில் இருக்கும் இருசக்கர வாகனத்தை அப்பா இல்லாத போது அவன் நணபர்களோடு பந்தயம் வைத்து ஓட்டி செல்ல அப்பா கண்டு பிடித்து திட்டியும் பழக்கம் தொடர்கிறது. அப்படியொரு நாள் அவன் அப்பாவுக்கு தெரியாமல் வண்டி எடுத்து போய் பந்தயத்தில் வேகமாக ஓட்டி விபத்தில் சிக்குகிறான். உடன் வந்த நண்பர்கள் பயத்தில் அவனை அப்படியே போட்டு விட்டு செல்ல அவனுக்கு மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டு ஆக்சிஜன் போகும் பாதையில் தடை ஏற்படுகிறது.

வீட்டுக்கு போன் வந்து பதறி மருத்துவமனைக்கு சென்று மகனைப் பார்த்த அப்பா பதறினார். எவ்வளவு செலவானாலும் சரி மகனை காப்பாற்றினால் போதும் என பெற்றோர் துடிக்க அவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆக்சிஜன் போகாததால் மூளை பாதித்து இருக்கிறதென மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

ஆறு மாத மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு அவன் மீண்டும் பள்ளிக்கு செல்ல அங்கு பாடங்களை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. ஒன்று அவனால் முழுதுமாக சமீபத்தில் நடந்தவற்றை நினைவு வைத்துக் கொள்ள இயலவில்லை. பழைய நினைவுகள் அவன் வசம் முழுதுமாக இருந்தது. அவனுள் அது மிக மோசமான விளைவுகளை மேற்கொண்டது. அது ஏற்படுத்திய தாக்கமே அவனிடம் தேங்கி நின்ற அந்த ஒற்றை கேள்வி. இன்று பதினாறு வருடங்கள் ஆகி விட்டது. ஆனாலும் தொனியிலோ வலியிலோ எள்ளளவும் குறையவில்லை அவனிடம் மிஞ்சியிருக்கும் அந்தக் கேள்வியில் – என்ன ஏன் அப்பா காப்பாத்துன?

பத்தாவது வகுப்பில் மனநல மருத்துவரின் பரிந்துரையின் படி, கூடுதலாக ஒரு மணி நேர அவகாசம் வாங்கி பரீட்சையில் வெற்றி பெற்றான். அது போலவே பன்னிரெண்டாம் மற்றும் அவன் அப்பா சேர்த்த பொறியியல் கல்லூரி படிப்பிலும் அவன் வெற்றி பெற்றான்.

ஆனால், இந்த காலகட்டம் மிக வேதனை வாய்ந்தது. அவனது ஞாபக மறதியை உடன் படிக்கும் மாணவர்கள் கிண்டல் செய்ய அவன் மிக பாதிப்பிற்குள்ளாகிறான். இயலாமையின் தாக்கத்தில் கோபம் வந்து அவர்களை அடிக்க , புகார்கள் குவிந்த காலங்களை அப்பா தனது அரசு பணியின் சக்தியால் வென்றெடுக்கிறார். மிகுந்த மனக்குழப்பத்தில் அவன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிறான். நிறைய சாப்பிட ஆரம்பிக்கிறான். எப்போதும் சமூக வலைத்தளங்களில் உள்ள டேட்டிங் தளங்களில் ஈடுபடுவது. இதை தட்டிக் கேட்டால் அவன் அப்பாவிடம் கேட்பது – என்ன ஏன் அப்பா காப்பாத்தின.

மூளையின் செயல்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்பால் தான் இந்த உலகில் வாழ தகுதியற்றவன் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. தானா இப்படி ஆகி விட்டேன் என அவனாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு பரீட்சையில் பத்து மதிப்பெண்ணுக்கு ஏழு வாங்கிய போது அவன் மனம் உடைந்து மாடியிலிருந்து குதித்திருக்கிறான். ஏழு மதிப்பெண் வாங்கும் மாணவனா நான் என்று கேட்ட அவனுக்கான ஆறுதலை சமூகமோ குடும்பமோ காலமோ அவனுக்கு வழங்கவில்லை.

மெல்ல மெல்ல தனிமையின் கோட்டைக்குள் புகுந்தான் அவன். மக்களோடு பழகினால் தன் உண்மையான குறைபாடால் ஒதுக்கப்பட்டு கேலி செய்யப்படுவதை நினைத்து அவன் மெல்ல தனி உலகினுள் புகுந்தான். அவனது நண்பர்கள் அவனை கஜினி என்று அழைத்தார்கள்.

அவனது தங்கைக்கும் அவனுக்கும் சின்ன சின்னதாய் மோதல்கள் மனதளவில் வர ஆரம்பித்தன. அவன் அப்படி இருப்பதால் தன்னால் தன் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வர முடியவில்லையே என்று தங்கைக்கு ஆதங்கம். அவன் மேலிருக்கும் வெறுப்பு, இந்த மருத்துவ முறைமை மீதிருக்கும் வெறுப்பு இவை எல்லாவற்றையும் அவன் அப்பா, அம்மா, தங்கை மீது அறைக்கதவை பூட்டி விட்டு அடிப்பதில் காட்டுவான். அப்போதெல்லாம் அவன் அப்பா முன் கத்தியை நீட்டி- ஒன்று நீ என்னை கொலை செய்..அல்லது நான் உன்னைக் கொலை செய்வேன் என்று சொல்ல, மொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியும் சிதைகிறது.

பின் அதைத் தாங்க முடியாமல் குடும்பத்தினர் மன நல காப்பகத்திற்கு ஒரு முறை போன் செய்து அவனிடமிருந்து தப்பினர். அதன்பிறகு, இப்போது வரை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மன நல காப்பகத்தில் தான் இருக்கிறான். சமூகத்தின் மீது ஒரு கசிப்புணர்வும் காழ்ப்புணர்வும் அவனுள் அதிகரித்து உள்ளது.

ஆனாலும், இன்றும் மாடியிலிருந்து குதித்து விடுவேன் என்று சொல்வது அவனிடம் இருந்து கொண்டே இருக்கிறது. தொலைதொடர்பு சாதனங்கள் எதுவும் அவனிடம் கொடுக்காமல் இப்போது காப்பகத்தில் வைத்திருக்கிறார்கள். எனக்கு ரெண்டு கல்யாணம் செய்யணும்…எங்கப்பா மகாத்மா காந்திக்கு உறவினர் தெரியுமா என்று அவன் சொல்லும் வார்த்தைகள் தான் அவனது உளவியல் சிக்கலை சொல்கின்றன. மருந்துகள் வாயிலாக அவனது வன்முறை மனதை தணித்து மனதிற்கு ஆலோசனை மட்டுமல்ல, சில செயல்திறன் பயிற்சிகள் மூலமாகவும் அவனது கவனத்தை கூர்மைப்படுத்த முனைகிறார்கள்.

எல்லோருடைய மூளையையும் செயல்திறன் பயிற்சிகளால் இன்னும் கூர்மைப்படுத்த முடியும். விஜய் இன்றும் சிறு குழந்தை போல் சாலை கடக்க முடியாமல் இருக்கிறான். தனக்கு அப்பா ஒரு கம்ப்யூட்டர் செண்டர் வைத்துக் கொடுத்து அதன் முதலாளியாக இருக்க நினைகிறான். இரண்டு திருமணங்கள் செய்ய நினைக்கிறான். இதெல்லாம், அப்பா அவனை பார்க்க வரும் போதெல்லாம் கேட்கிறான். அவர் மறுத்ததால் அவன் கேட்பது – அப்பா எதுக்கு என்ன காப்பாத்தின ?

மீண்டும் சந்திப்போம்… அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை!

தகவல்: டாக்டர் சுனில்குமார் மற்றும் டாக்டர் ஜெயசுதா – மைண்ட் ஜோன் மருத்துவமனை

எழுத்தாக்கம்: தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

படங்கள்: கூகுள் இமேஜ்

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி!

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி – 2

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி – 3

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி – 4

செவ்வாய், 7 நவ 2017

AUTHOR

Dr. Sunil

All stories by: Dr. Sunil

Leave a Reply

Your email address will not be published.