• Ph: 044-24460101, 9444297058, 9176055660 | mailmindzone@gmail.com

Subscribe to Mind Zone Newsletter to get the latest news/updates from Mind Zone, including the latest developments in the field of Psychiatry and Psychology. Just enter your Email address below and click "Signup".

Mind: an illusory mirror - part 1

Mind: An Illusory Mirror | Special Feature – Part 1

1024 965 Mind Zone

சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி!

 

டாக்டர் சுனில்குமார் – டாக்டர் ஜெயசுதா காமராஜ்

குடிப்பழக்கம், தற்கொலை எண்ணங்கள், அதித பயம், இனம்புரியாத கவலை, கோபம், பதற்றம், வாட்ஸ்அப் ஃபேஸ்புக் அடிக்ஷன் என மனம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு தருவது ‘மைண்ட் ஜோன்’ மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் சுனில்குமார் மற்றும் மனநல மருத்துவர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் ‘மனம் எனும் மாயக்கண்ணாடி’யை நமக்குக் காட்டப் போகிறார்கள்.

சண்முகத்தின் சொந்த ஊர் விழுப்புரம் பக்கம் ஒரு குக்கிராமம். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடனே படித்தான். கல்லூரியின் கடைசி ஆண்டு நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையின் மிக முக்கியமான ஐ.டி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். வழக்கமான தமிழ் சினிமா பாணியில் இங்கு படம் நிறைவு பெற வேண்டும். ஆனால், இங்குதான் ஆரம்பித்தது.

முதல் மாதம் மிக அற்புதமான காலகட்டம். மனதில் தெரிந்ததெல்லாமே அந்த பல இலக்க சம்பளமும் ஊரில் அம்மா அப்பாவின் கவுரவமான மகிழ்ச்சியும் மட்டுமே. பிறகு அலுவலகத்தில் முதல் ப்ரெசன்டேஷன் வருகிறது. சண்முகத்துக்குப் பதற்றமும் அதிகரிக்கிறது. அதை மட்டுப்படுத்திக்கொண்டு அவன் எல்லோர் முன்பும் ப்ரெசன்ட் செய்ய அவனது ஆங்கிலப் பரிச்சியமின்மை அவனைத் தடுமாறச் செய்கிறது. எல்லோர் முன்பும் வியர்த்துப்போய் நிற்க, அவனது அணித் தலைவர் கண்ணாடி அறையினுள் அழைத்து சென்று , ‘தம்பி… முதல் முயற்சி… உன் தடுமாற்றம் புரிகிறது. ஆனால், அடுத்த வாரம் மீண்டும் ஒரு ப்ரெசன்டேஷன் உள்ளது. அதை நீங்கள் மிக சரியாக ப்ரெசன்ட் செய்ய வேண்டும். மும்பையிலிருந்து கம்பெனி சி.ஈ.ஓ. வருகிறார்’ என்று சொல்கிறார்.

டாக்டர் சுனில்குமார்

மறுவாரம். சண்முகம் பெருமுயற்சி செய்தும் அவனால் நினைத்தது போல் ப்ரெசன்ட் செய்ய முடியவில்லை. மஞ்சப்பை, ட்ரங்குப் பெட்டி என்று கிண்டலும் அவமானமும் அவனைத் துரத்தி அடித்தன. தனியாக யோசிக்கும்போது இந்த வேலை தனக்கானது தானா என்ற பயம் வந்தது. ஆனால், அது இல்லாவிட்டால் ஏற்படும் பொருளாதார இழப்பும் அம்மா அப்பாவின் கனவு தகர்ந்து போகும் வாய்ப்பும், கனவுகள் மெய்ப்பிக்கப்படாமல் போகும் வலியும் அதீதமானது.

நண்பரின் ஆலோசனைப்படி அவர் ஒரு மனநல வைத்தியரைப் பார்த்து இந்தச் சங்கடத்தை மீட்டெடுப்பது பற்றி கேட்க அவர் ஒரு மாத்திரையைக் கொடுத்திருக்கிறார். அதை அடுத்த ப்ரெசன்டேஷனுக்கு முன்னே அவன் சாப்பிட ஓரளவு தைரியமாய் பேச முடிந்திருக்கிறது.

அப்படி ஆரம்பித்த வழக்கம்தான். இன்று ஒரு நாளைக்கு பதினைந்து மாத்திரைகள் சாப்பிடும் நிலையில் அவர் இருக்கிறார். மனம் பதற்றமாக இருக்கும்போதெல்லாம் சாப்பிடத் தோன்றி, காதலைச் சொல்லக்கூட மாத்திரையைச் சாப்பிட்ட பிறகே சொல்ல முடிந்திருக்கிறது.

இந்த நவீன உலகம் ஒருபுறம் திறமை என்று நிர்ணயித்த கோட்பாடுகளை அளவீடாகக்கொண்டு தனித்திறனை நாம் மதிப்பீடுகளை உருவாக்குகிறோம். அதுதான் நம் பொருளாதாரத்தை, நாம் பணிபுரியும் இடங்களில் தீர்மானிக்கிறது. அது மறைமுகமாகத் தரும் அழுத்தத்தை நாம் உணர்வதே இல்லை. உணர்ந்தாலும் புறந்தள்ள நிர்பந்திக்கிறது புற சமூகம். அக சமூகமோ அதனாலேயே அதை ஒப்புக்கொள்ள யோசிக்கிறது.

இத்தகைய பணியிட மன அழுத்தங்கள் நம்மில் பலருக்கு உண்டு. எல்லோருக்கும் பொதுவான ஒன்றாகவே அதுவும் இந்தக் காற்று, நதியைப் போல ஆகிவிட்டது. ஸ்ட்ரெஸ் என்பது புழக்கத்தில் இருக்கும் சாதாரண வார்த்தையாகி, பரவி, இப்போது டிப்ரஷன் என்பது சகஜமான வார்த்தையாகி விட்டது. அதேநேரம் அது போகும் போக்கில் சொல்லி விட்டுப்போன வார்த்தையாக மாறி விட்டது.

உடலுக்குச் சுகமில்லாதபோது சிகிச்சைகள் எடுப்பதுபோல மனதுக்கு சுகமில்லாதபோது சிகிச்சை நிச்சயம் தேவை. இன்று அக்டோபர் 10 உலக மனநல நாளாக கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் இதைக் கொண்டு இந்த ஆண்டை பணியிடத்து மன அழுத்தங்களை நீக்கும் முயற்சியை மேற்கொள்கிறது. எனவே, வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளர்களின் மனநலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்தந்த நிறுவனங்களுக்கு இருக்கிறது. ஆனால், இன்றைய சூழலில் எல்லா நிறுவனங்களும் தங்கள் பணியாளர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்று கவலைப்படுகிறதா?

நிச்சயமாக இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் எல்லா நிறுவனங்களுக்கும் மிக முக்கிய தேவை, தனது பொருளாதார முன்னேற்றமாக இருப்பதையே நாமும் மறைமுகமாக அறிந்திருக்கிறோம். ஆனால், உலகப் பொருளாதார மன்றம் மற்றும் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நடத்திய புள்ளிவிவரப்படி பணியாளர்களின் மன ஆரோக்கியமின்மை நிறுவனத்தின் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது என்றும் அதை சரி செய்ய நிறுவனங்கள் ஒரு சதவிகிதம் பணம் செலவழித்து பணியாளர்களுக்கு மனநல ஆலோசனையைக் கொடுத்தால் தனது பொருளாதார இழப்பை சரி செய்வதோடு அதேபோல் நான்கு சதவிகித லாபத்தையும் ஈட்ட இயலுமெனவும் வழி சொல்கிறது.

டாக்டர் ஜெயசுதா காமராஜ்

ஆனால், நிஜத்தில் அப்படி மனநலம் பாதிக்கப்பட்ட பணியாளரை எப்படி நம் நிறுவனங்கள் நடத்துகின்றன என்பதற்கு ஆஷிஷின் கதையே உதாரணம். ஆஷிஷ் அழகான இளைஞன். ஆனால், அவனும் பணியிடத்து அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு மாதம் அனுமதிக்கப்படுகிறான். பின்னால் விடுமுறை காரணமாக மனநல மருத்துவமனை தந்த விடுமுறை சீட்டை கொடுக்கும்போது நிர்வாகம் அதிர்கிறது. மீண்டும் போய் அதே மனநல மருத்துவரிடம் போய் தான் பணி செய்ய ஏற்ற நிலையில்தான் இருப்பதாக எழுதி வாங்கி வர சொல்கிறது. கூடவே இரு சட்ட திட்டங்கள். ஒன்று, அவன் அந்த அலுவலகக் கட்டடத்திலிருந்து குதிக்க மாட்டான் என்ற உறுதிமொழி. மற்றொன்று அவன் யாரையும் கொலை செய்துவிட மாட்டான் என்ற உத்திரவாதம். இதை எந்த மருத்துவரால் கொடுக்க இயலும்?

இப்படி மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறதென தெரியும்போது ஒரு நிறுவனம் அந்த ஊழியரை கொலை செய்யக்கூடியவராக பார்ப்பதே மனித உரிமை மீறல். அலுவலகப் பாதுகாப்பு என்பது பணியாளர்களின் மகிழ்ச்சியை மீறி இருக்கும்பட்சத்தில் அங்குள்ள ஊழியர்கள் வெறும் மெஷினாகவே பாவிக்கப்படுவார்கள்.

மனநலம் பாதிக்கப்பட்ட ஓர் ஊழியரால் ஒருபோதும் கூர்ந்து வேலை செய்ய இயலாது. எல்லோருடனும் குழுவாகச் சேர்ந்து பணியாற்ற இயலாது. அடிக்கடி விடுமுறை எடுப்பார்கள். பணி தேங்கும். இங்குள்ள பல பன்னாட்டு நிறுவனங்களில் இருக்கும் மனிதவளத் துறை என்பது சம்பள உயர்வை மட்டும் கவனிக்கும் துறையாகவே உள்ளது. தனிப்பட்ட பணியாளர்களின் பிரச்னைகளைக் காது கொடுத்து கேட்கப்படுவதேயில்லை.

இன்றைய நவீன உலகம் காதற்ற ஓர் இயந்திரம். இந்த மனநல நாளில் இதற்கு குறிப்பாக அலுவலகம் சார்ந்த சமூகத்துக்குக் காதுகளைப் பொருத்தி பகிர்தலைத் தூண்டி அதன் மூலம் ஒரு சமூகம் மனமகிழ்ச்சியை அனுபவிக்க உலக சுகாதார நிறுவனம் திட்டமிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

இந்தத் தொடர் ‘மனம் என்னும் மாயக்கண்ணாடி’யில் தங்கள் பிம்பங்களைச் சிதைத்துக் கொண்டவர்களின், சிதைந்ததாய் கருதி பார்ப்பவர்களின் வாக்குமூலமாக இருக்கப்போகிறது.

சந்திக்கலாம்… மீண்டும் அடுத்த திங்கள்…

எழுத்தாக்கம்: எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

புகைப்படங்கள் : நரேந்திரன்

Leave a Reply

Your email address will not be published.